இந்தியா

கர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கும் டி.கே. சிவகுமார்

ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவகுமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) பதவியேற்கிறார். கர்நாடகாவில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.05 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவகுமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இதையடுத்து, டி.கே. சிவகுமாருடன் 12 முதல் 14 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி. வேணுகோபால் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் டி.கே. சிவகுமாரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பதவி விலகியுள்ள முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை நேற்று நேரில் சந்தித்தனர்.