டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் முதியவர் ஒருவரிடம் ரூ.10.74 கோடி சுருட்டிய வழக்கில், 26 வயதான பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் ரோஹன் ராஜேஸ்வர் ஜாதவ் என்பவரை புனே சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.
புனேயின் டெக்கான் பகுதியைச் சேர்ந்த 82 வயது ஓய்வுபெற்ற தொழிலதிபர் ஒருவரை மிரட்டிய மோசடி கும்பல், அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளது.
இதன் மூலம் அவரிடமிருந்து ரூ.10.74 கோடியைப் பறித்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் பிரிவு சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்வப்னாலி ஷிண்டே கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் ஜாதவ், மோசடி கும்பலுக்கு போலி வங்கி கணக்குகளை வழங்கியுள்ளார்.
இந்த கணக்குகள் மூலம் பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது" என்றார். போலீசார் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது இந்த போலி கணக்கு நெட்வொர்க் அம்பலமானது.
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுபம் தனதோலே(26), அமர் அதராகி(24) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அடிப்படையிலேயே ரோஹன் ஜதாவும் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் ஜதாவ், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.