உச்சநீதிமன்றம்
இந்தியா

நாங்கள் பாராளுமன்றத்தின் 3-வது அவையாக செயல்பட முடியாது: உச்சநீதிமன்றம்

70 வருடமாக எஸ்.சி. தொகுதியாக உள்ளது. அதை மாற்ற உத்தரவிடக்கோரி மனு.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபை தேர்தலில் SC மற்றும் ST தொகுதிகள் உள்ளன. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 191-கடிபூர் சட்டமன்ற தொகுதி 70 ஆண்டுகளாக எஸ்.சி. தொகுதியாக உள்ளது. இதை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று அத்தொகுதியில் வாக்காளராக உள்ள ஜெக்திஷ் சிங் வழக்கு தொடர்ந்திருந்தார்.

போராட்டம் நடத்தலாமே?

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "நீங்கள் தவறான நம்பரை டயல் செய்து விட்டீர்கள் (தவறாக நீதிமன்றத்தை நாடியதாக சுட்டிக்காட்டுதல்). தற்போது போராட்டம் மற்றும் ஆர்ப்பட்டம் காலம். ஒருவேளை நீங்கள் அதையே பின்பற்றுவது நல்லது" என்று தெரிவித்தார்.

இதற்கு வழக்கு தொடர்ந்தவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "எனது மனுதாரருக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. அவருக்கு தொண்டை வலியும் உள்ளது" என்றார்.

பின்னர் உச்சநீதிமன்றம் அமர்வு "வாக்குப்பதிவு சாதியை அடிப்படையாகக் கொண்டது என்று கருதிவிட முடியாது. இந்த வாதம், பெரும்பான்மைச் சமூகத்தினர் சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்ற அனுமானத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போதும் அவ்வாறே நடக்கும் என்று கூற முடியாது. ஜனநாயகத் தேர்வுகள் குறித்து நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் வழங்க முடியாது; அந்த வாக்காளர்கள் எடுக்க வேண்டிய முடிவாகும்.

உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்ந்து உள்ளது. எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கும் நீங்கள் தாராளமாக வாக்களிக்கலாம். ஆனால், உங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு உங்களால் வாக்களிக்க முடியாது என்று கூறுவதை ஏற்புடைய வாதமாகக் கருத முடியாது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான உங்கள் உரிமை ஒரு குறிப்பிட்ட தொகுதியுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; நீங்கள் விரும்பினால், இட ஒதுக்கீடு இல்லாத பிற தொகுதிகளிலும் போட்டியிடலாம்.

நாடாளுமன்றத்தால்தான் முடியும்

நாடாளுமன்றத்தின் மூன்றாவது அவையாக எங்களால் செயல்பட முடியாது. நீங்கள் தவறான எண்ணை டயல் செய்கிறீர்கள். இது போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிறைந்த காலம். ஒருவேளை நீங்களும் அதைப் பின்பற்றலாம்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் நிச்சயமாகக் குரல் எழுப்பலாம், வாதிடலாம். ஆனால், அதைச் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு" என்று தெரிவித்தது.

டெல்லியில் தற்போது அடிக்கடி போராட்டம் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT