விமான போக்குவரத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
விமான பயணங்களின்போது பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது விமான பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், விமானத்தில் உள்ள இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஒரே எண்ணில் பதிவுசெய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்கவேண்டும். விமானங்களில் பயணிகளின் உடைமைகளை எடுத்துச் செல்வது, செல்ல பிராணிகளைக் கொண்டு செல்வது, இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்வது தொடர்பான விதிகளை தெளிவாக வழங்கவேண்டும்.
விமான பயணம் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு பயணிக்கும் அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.