திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
பக்தர்கள் வைகுந்தம் வரிசை அறைக்கு செல்லும் முன்பாக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பலத்த சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மற்றும் ஸ்கேனிங் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல் சோதனையில் சரிவர கண்டுபிடிக்காத செல்போன் மற்றும் மின்னணு பொருட்கள் 2-வது ஸ்கேனிங் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.
3 அடுக்கு சோதனையை மீறி நேற்று முன்தினம் பக்தர் ஒருவர் தனது செல்போனை வைகுந்தம் வரிசை அறைக்கு கொண்டு சென்றார்.
அவரது செல்போனில் அப்பகுதியில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். பதிவு செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி பக்தர் எப்படி செல்போனை கொண்டு சென்றார். பாதுகாப்பு பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தேவஸ்தான அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் பக்தர் பதிவு செய்த வீடியோவை நீக்கினர். இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு செய்த பக்தர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 95,152 பேர் தரிசனம் செய்தனர். 40,601 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.21 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.