இந்தியா

சத்துணவில் உப்புக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் - 40 பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிப்பு!

உணவுப் பொருட்களுக்கு அருகில் டிடர்ஜென்ட் பவுடர் ஏன் வைக்கப்பட்டது?

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில், உப்புக்கு பதிலாக தவறுதலாக டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்பட்டதால், உணவை உண்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

நாலந்தா மாவட்டம் நூர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரசி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாணவர்களுக்கு சோயாபீன்ஸ் கூட்டு பரிமாறப்பட்டது.

உணவை சாப்பிட்ட மாணவர்கள், அதில் உப்பு குறைவாக இருப்பதாக சமையலரிடமும் ஆசிரியர்களிடமும் கூறியுள்ளனர். அப்போது, சமையல் அறையில் இருந்த ஊழியர்கள், உப்புக்கு பதிலாக அங்கிருந்த டிடர்ஜென்ட் பவுடரை தவறுதலாக எடுத்து மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர்.

அது சலவை தூள் என்று தெரியாமல் மாணவர்களும் உணவோடு சேர்த்து அதனைச் சாப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்:

டிடர்ஜென்ட் பவுடர் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பள்ளியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களையும் மீட்டு 'பீகார் ஷெரீஃப் மாதிரி மருத்துவமனைக்கு' சிகிச்சைக்காக அவசர அவசரமாக அனுமதித்தனர்.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரின் அதிரடி ஆய்வு மற்றும் எச்சரிக்கை:

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாலந்தா மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். "தற்போது அனைத்து குழந்தைகளும் ஆபத்து கட்டத்தைத் தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று சிவில் சர்ஜன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷ்ரவண் குமார், "மாணவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மதிய உணவு தயாரிப்பிலும், அதனைப் பரிமாறுவதிலும் இவ்வளவு பெரிய அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு:

மதிய உணவு சமைக்கும் இடத்தில், உணவுப் பொருட்களுக்கு அருகில் டிடர்ஜென்ட் பவுடர் ஏன் வைக்கப்பட்டது? மற்றும் அதனைச் சோதிக்காமல் மாணவர்களுக்கு எப்படிப் பரிமாறினார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சியப் போக்கு பீகாரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.