இந்தியா

“மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!

மாநகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்து மனு அளிக்க சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் குறைபாடு இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றவர் இந்த நூதன ஆர்ப்பாட்டை முன்னெடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, வேடிக்கையாக அதே சமயம் அதிகாரிகளைச் சாடும் வகையிலான புகாரை அளித்த அந்த நபர்., “நாங்கள் அவர்களைக் கடிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பு எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும், ஆனால் இப்போது அது நடப்பதில்லை. அதனால், நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்திச் செல்வோம்.

மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நாங்கள் நீதியைக் கோருகிறோம். எங்கள் பெயரில் நிதியைத் திருடி, எங்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என தெரிவித்தார்.

மேலும் நாய்களுக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யாமல், அதிகாரிகள் போலியான ரசீதுகளை மட்டும் தயாரித்து ஊழல் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவருக்கு துணையாக மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தீபக் முல்லு ரத்தோரும் சென்றுள்ளார்.

ரூ. 40 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு

மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்யவும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அதே காலகட்டத்தில், 13,225 நாய் கடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.

மறுபுறம் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் சஞ்சய் சுக்லா, ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். கருத்தடைத் திட்டம் தொடர்பான பதிவுகளும், தரவுகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் இவ்விவகாரம் நகராட்சி ஆணையருடன் விவாதிக்கப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.