டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, டெல்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். மும்பை போலீசார் உடனடியாக இந்தத் தகவலை டெல்லி போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதன்பிறகு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் செங்கோட்டை வளாகம் முழுவதும் டெல்லி போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இது ஒரு வதந்தி என போலீசார் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.