இந்தியா

15 ஆண்டுகளுக்கு பின்பு 3 நாகப்பாம்பு குட்டிகள் - டெல்லி விலங்கியல் பூங்கா சாதனை

விலங்கு பராமரிப்பு குழுக்களின் மேற்பார்வையில் மூன்று நாகப்பாம்பு குட்டிகளும் வெளிவந்தது.

டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா மூன்று மூக்குக்கண்ணாடி நாகப்பாம்பு குட்டிகளை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது.

விலங்கு பராமரிப்பு குழுக்களின் மேற்பார்வையில், அடைகாக்கும் காலத்திற்கு பிறகு, மூன்று நாகப்பாம்பு குட்டிகளும் வெளிவந்ததாக, மிருகக்காட்சி சாலை இயக்குநர் சஞ்சீத் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து மிருகக்காட்சி சாலை இயக்குநர் கூறுகையில், “நாகப்பாம்பு முட்டைகள் ஒரு செயற்கை அடைகாக்கும் அறையில் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு இயந்திரங்கள் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளை பராமரிக்க உதவின.

குஞ்சுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. அவை அந்த இனத்திற்கேற்ப சூழலை கொண்ட பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

2010-ஆம் ஆண்டில் கண்ணாடி நாகப்பாம்புகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து, 11 குஞ்சுகளை பெற்றது. அதன்பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக குஞ்சுகள் எதுவும் இனப்பெருக்கம் செய்யப்படாமல் இருந்தது” என்று தெரிவித்தார்.

நாகப்பாம்புகளின் வர்த்தக ரீதியிலான அழிவை தடுக்கவும், சூழலியல் சமநிலையை பேணவும் இந்த இனம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.