டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரை அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய திலக் நகர் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வான ஜர்னைல் சிங், அப்பகுதியில் நடைபெறும் சாலை கட்டுமானப் பணிகள் குறித்து அந்த இளைஞர் புகார் தெரிவித்ததால், வர்மா ஆத்திரமடைந்து அவரை அறைந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சாலையை ஆய்வுசெய்ய சென்ற அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதால், ஆத்திரமடைந்து அவர் இவ்வாறு நடந்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதால், அமைச்சரின் ஆய்வின்போது இவரும் உடன் இருந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் பர்வேஷ் வர்மா, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த இளைஞர் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர் என்றும், அவர் தனது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதால் தான் இந்தத் தகராறு ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சாஹிப் என்ற அந்த இளைஞர்., “நான் எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங்கின் சமூக ஊடகப் பணிகளைக் கவனித்து வருகிறேன். இந்தச் சாலை ஆய்வு தொடர்பாக எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு வந்த அழைப்பின்பேரில் நாங்கள் இங்கு வந்தோம்.
சாலையின் மேற்பரப்பு எவ்வாறு சிதைந்து வருகிறது என்பதை நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன். இதைச் சுட்டிக்காட்டியபோது அமைச்சரால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; அவர் என் மீது கை ஓங்கினார், மேலும் அவருடன் வந்தவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர்.
அங்கு போலீசாரும் இருந்தனர். அவர்கள் முன்னரே இவை அனைத்தும் நடந்தன. அமைச்சர் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்மீது இடைநீக்கம் போன்ற எதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாங்கள் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் வைக்கவில்லை. எங்களிடம் ஆதாரம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாங்கள் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர்வோம்.” என தெரிவித்துள்ளார்.