ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி இளைஞர்கள் அமைதியான முறையில் நடத்திய பேரணியில் டெல்லி போலீசாரும், ஆர்ஏஎப் படையினரும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர். தடியடி நடத்தியும், கண்ணர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக பலரின் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டுகள் துளைத்த புள்ளி புள்ளியான காயம் இருந்தது கண்டறியப்பட்டது.
இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் இவை சில நேரங்களில் பார்வை, கேட்கும் திறனை இழக்கச் செய்யும். முக்கிய உடல் பாகங்களில் பட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
இதுமட்டுமின்றி, சீருடையற்ற நபர்கள் அன்றைய தினம் இளைஞர்களை லத்திகளால் தாக்கிய வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. நச்சுத்தன்மை வாய்ந்த காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
மாணவர்களின் பிரதான கோரிக்கையான, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்துவிட்டபோதிலும், ஜூலை 20 அன்று மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் ராகுல் பகிர்ந்துள்ள கடிதத்தின் நகலில், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது உயிருக்கே ஆபத்து நேரும் அளவுக்குபெல்லட் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்த ஒப்புதல் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைதியான போராட்டம் என்பது எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் இன்றியமையாதது. போராடுபவர்களை பாதுகாத்து அவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் கேட்டறிந்து அதற்கான தீர்வை காண்பது அரசின் கடமை.
ஆனால் இந்த கொடூரமான வன்முறை எல்லா நெறிகளையும் உடைத்து நாட்டை கொந்தளிக்க செய்துள்ளது. பதில்களையும், பொறுப்புகூறலையும் கேட்கும் இளைஞர்களும், மாணவர்களும் நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல் கேட்கப்பட்டே தீரும்.
ஜூலை 20 அன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை ஆயுதங்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பெண்களும் காவல்துறையினால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அந்தரங்க உறுப்புகளும் திட்டமிட்டு தாக்குதலின்போது குறிவைக்கப்பட்டுள்ளது.
ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகள், ஒரு செய்தியாளர் உட்பட மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. சாஹில் என்ற 19 வயது மாணவர்களை நான் சந்தித்தேன். பெல்லட் குண்டுகளால் அவர் தன் ஒரு பக்க கண்பார்வையை இழந்து மிகுந்த வலியில் உள்ளார்.
டெல்லியில் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பாதுகாப்பு படைகள் நேரிடியாக உங்களின் கீழ் தான் வருகிறது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் பெல்லட் துப்பாக்கிகள் உட்பட மாணவர்கள் மீது உயிரை பறிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த நீங்கள் தான் ஒப்புதல் வழங்கினீர்களா? அல்லது வேறு யார் வழங்கினார்கள்?
சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.