இந்தியா

டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-ஜே.பி. நட்டா காரசார பதில்!

"செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார்."

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

கடந்த 20ஆம் தேதி அன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவர்களில் ஒருவரான ஐஷி கோஷ்-ஐ கைது செய்வதற்காக டெல்லி காவல் துறையினர், சிபிஐ(எம்) (CPI-M) கட்சியின் தேசியத் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் அவையில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

ஒரு தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து காவல் துறை நடவடிக்கை எடுத்ததை தான் நேரில் தட்டிக்கேட்டதாகவும், அதற்கு 2021-ஆம் ஆண்டு ஜேஎன்யு வளாகத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் குற்றச்சாட்டுகள்:

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாட்டின் "ஜனநாயகமும் மக்களும் பாதுகாப்பாக இல்லை" என்று குற்றம் சாட்டினார். போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகித்த அதிகாரிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சுதந்திரமாக உலா வருவதாகக் கூறி, அரசின் பொறுப்பற்ற தன்மையைக் கேள்வி எழுப்பினார்.

அகிலேஷ் யாதவ்:

டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு அடக்குமுறை கையாளப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அகிலேஷ் யாதவ், "டெல்லியில் நடந்த சம்பவம் அவசரநிலையை விடவும் மிக மோசமானது" எனக் கடுமையாகச் சாடினார்.

மக்களவையில் அமளி:

மக்களவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு முன்பாக, முறைகேடு தடுப்பு மசோதா மீதான விவாதத்திற்கு நடுவே எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவை ஒழுங்கிற்குத் திரும்பாவிட்டால் ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.

பாஜக தரப்பில் ஜே.பி. நட்டா பதில்:

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய மாநிலங்களவைத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா காவல் துறையின் நடவடிக்க நியாயப்படுத்திப் பேசினார்.

சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு:

சட்டம் மற்றும் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வரக் காவல் துறை தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இயல்பானது என்றும், அதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் போராட்டங்களில் இறங்கத் துணியும் மாணவர்கள், அதுபோன்ற சூழ்நிலைகளில் காவல் துறையின் நடவடிக்கைகளைச் சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றார். அவசரநிலைக் காலத்தை நினைவுகூர்ந்த அவர், தாம் ஒரு மாணவர் தலைவராக இருந்தபோது வகுப்பறையிலிருந்தே இரண்டு முறை காவல் துறையால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, "செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.