தேசிய தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கவும் டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் மத்திய டெல்லியில் உள்ள 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை தற்காலிகமாக மூடி உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நிலவி வரும் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டரியேட் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மறு உத்தரவு வரும் வரை அதிரடியாக மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டரியேட், படேல் சௌக், ஜன்பத், டெல்லி கேட், ஐ.டி.ஓ, சுப்ரீம் கோர்ட், லோக் கல்யாண் மார்க், ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மார்க், பாரகம்பா ரோடு, சேவா தீர்த், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ நிலையங்களின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செகரட்டரியேட் ஆகிய சந்திப்பு நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் வசதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.