உமர் காலித், ஷர்ஜீல் இமாம்  
இந்தியா

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால ஜாமீன் கோரினார்.

2020 டெல்லி கலவரம் சதி வழக்கில், ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

ஜெஎன்யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும் சமூக ஆர்வலர்களுமான உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் 2020 இல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டனர்.

கைது

சார்ஜில் இமாம் 2020 ஆகஸ்ட் 25 அன்றும், உமர் காலித் 2020 செப்டம்பர் 13 அன்றும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணையின்றி சிறையில் உள்ளனர்.

தொடர்ந்து பலமுறை அவர்களின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து வந்தது.

ஜாமீன் மறுப்பு

இதனிடையே அண்மையில் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உய்ரநீதிமன்றம் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீடு மனுக்களை இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தங்களது மனுக்களில், காலித் மற்றும் இமாம் ஆகியோர், அரசுத் தரப்பு சாட்சிகளை இன்னும் விசாரிக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்றம் விதித்த ஓராண்டு காலத் தடை முடிவடையும் தருவாயில் உள்ளது என்றும் வாதிட்டுப் பிணை கோரியுள்ளனர்.

விசாரணையின் போது, ​​காலித் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால ஜாமீன் கோரினார்.

இமாம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் டேவும், இமாமின் அவரது நீண்டகால சிறைவாசத்தை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரினார்.

இருப்பினும், "இன்று இல்லை" என்று கூறி, உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

உத்தரவு

இடைக்கால ஜாமீன் மனுக்கள் மீது எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு டெல்லி காவல்துறையின் வாதம் கேட்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். எனவே இந்த மனுக்கள் குறித்து டெல்லி காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைப்பதற்கு தலைமை நீதிபதியிடம் நிர்வாக அனுமதி வாங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையே தண்டனை

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயக முறையில் குரல் எழுப்புபவர்களை ஒடுக்க விசாரணையின்றி சிறையில் வைத்திருக்க அனுமதிக்கும் உபா சட்டத்தை மத்திய பாஜக அரசு துஷ்பிரயோகம் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே அவர்கள் சமூக வலைத்தளங்களில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததை தவிர கலவரத்தை தூண்டியதற்கான வலுவான ஆதாரம் இன்னும் சேகரிக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் முக்கிய சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளதை இன்றைய அமர்வில் விசாரிக்கப்பட்ட மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அவர்களின் ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து பல வருடங்களாக நிராகரிக்கப்பட்டு வருவது சட்டத்துறையும் அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறதா என்ற கேள்வியை விமர்சர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

நீதித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிஷன் சந்திர கவுல், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோர் தெரிவித்திருந்தனர். நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் மத்திய அரசின் உத்தரவுப்படியே இயங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

SCROLL FOR NEXT