இந்தியா

டெல்லி கலவர வழக்கு - 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஷர்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமின்

உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், ஷர்ஜீல் இமாமுக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்

மாலை மலர்

டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலரான ஷர்ஜீல் இமாமுக்கு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி நீதிமன்றம் 10 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்கவும், நோய்வாய்ப்பட்ட தனது தாயைக் கவனித்துக் கொள்ளவும் 6 வார கால நிவாரணம் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் 10 நாட்கள் மட்டும் அனுமதி அளித்துள்ளது.

இந்த இடைக்கால ஜாமீன் காலத்தில் அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தவிர வேறு யாருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 30,ஜாமின் வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலருக்கு ஜாமின் வழங்கி, இமாம் மற்றும் உமர் காலித் ஆகிய இருவருக்கும் மட்டும் ஜாமின் வழங்க மறுத்தநிலையில், இன்று டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

டெல்லி கலவர சதித்திட்டத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை அரசு சமர்பித்ததாக கூறி உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்தது. 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.