இந்தியா

வெள்ளக்காடான சாலைகள்.. இடியும் கட்டிடங்கள்.. முடங்கிய டெல்லி, மகாராஷ்டிரா!

முழங்கால் அளவு தேங்கிய மழைநீர்.. போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலைகள்.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழையினால் ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பித்துள்ளது.

பல இடங்களில் சாலைகள் ஆறுகளைப் போல காட்சியளிப்பதுடன், மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரம் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 மாடி கட்டிடம் இடிந்தது..

தொடர் மழையின் காரணமாக டெல்லியின் ரோகினி பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சர்தார்ஜங்கில் 72.6 மி.மீ மழை பதிவு..

டெல்லியின் முக்கிய இடங்களான சர்தார்ஜங்கில் 72.6 மி.மீ மழையும், லோதி ரோடு பகுதியில் 80.2 மி.மீ, ரிட்ஜ் பகுதியில் 77.8 மி.மீ, பாலம் பகுதியில் 63 மி.மீ மற்றும் ஆயா நகரில் 57.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வெள்ளக்காடான சாலைகள் – முடங்கிய போக்குவரத்து..

டெல்லியின் வடிகால் அமைப்புகளைத் தாண்டி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், முக்கியப் பகுதிகள் அனைத்தும் முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சதார் பஜார், கிரேட்டர் கைலாஷ், பதர்பூர், துவாரகா, விகாஸ் மார்க் மற்றும் புதுடெல்லி ரெயில் நிலையப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, டெல்லி - நொய்டா எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை-48 (தௌலா குவான், மஹிபால்பூர், ரஜோக்ரி) ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து செல்கின்றன.

வேரோடு சாய்ந்த மரங்கள்..

கிழக்கு கைலாஷ் பகுதியில் உள்ள இஸ்கான் கோவில் மற்றும் தேசிய இதயவியல் நிறுவனத்தின் வெளிப்பகுதிகளில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவசரக்கால மீட்புக்குழுவினர் மரங்களை அகற்றிப் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.

டெல்லியின் அண்டை நகரான குருகிராமிலும் இந்த மழையின் தாக்கம் எதிரொலித்துள்ளது. டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, சோஹ்னா ரோடு, செக்டார் 10A ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கின.

'ரெட் அலர்ட்' எச்சரிக்கை..

பருவமழை மேகக்கூட்டங்கள் இமயமலையின் அடிவாரப் பகுதியை நோக்கி நகர்வதே இந்தத் தொடர் கனமழைக்குக் காரணம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதுடன், இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தொடர் மழையினால் டெல்லியின் காற்றின் தரம் (AQI) 61 ஆகப் பதிவாகி திருப்திகரமான நிலைக்கு உயர்ந்துள்ளது பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

மகாராஷ்டிரா பெருமழை - 62 பேர் பலி!

தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, கட்டிட விபத்துகள் மற்றும் இடி-மின்னல் தாக்குதலில் சிக்கி இதுவரை 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் வழக்கத்தை விட 400% அதிகமான மழை கொட்டித்தீர்த்துள்ள நிலையில், மும்பை, புனே உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்குத் தொடர்ந்து 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.