டெல்லியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மெட்ரோ ரெயில், இணைய சேவைகள் இயல்பாக செயல்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் காரணமாக டெல்லி மெட்ரோ மற்றும் ரெயில் சேவைகளுக்கு முழுமை யான தடைவிதிக்கக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்த ரவை மீறியதாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வக்கீல் சந்த் குரேஷி என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
அனைத்துத் தரப்பினரின் வாதங்கள் கேட்கப்படும். அனைத்து வக்கீல்களுக்கும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். யாருக்கும் சிரமம் ஏற்படாது என்பதை உறுதியளிக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட் எப்போதும் நாட்டின் சேவைக்காக செயல்படுகிறது. நேற்று நடந்த சம்பவங்களால் நீங்கள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
நடந்த சம்பவத்தின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. தேவை ஏற்பட்டால் தடுப்புகளை அகற்ற வேண்டும்.
சட்டம்-ஒழுங்குக்கு உட்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் இணைய சேவை இயல்பாக செயல்பட வேண்டும். மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கமான அட்டவணைப்படி இயங்குவதையும், இணைய சேவைகளில் எந்த தடங்கலும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
வக்கீல்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை செய்வதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது. போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும். கைது செய்யக்கூடாது. அமைதியான முறையில் கூடுபவர்களை சட்ட விரோதமாக கைது செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.