டெல்லியில் ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கை.
அவர்களுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார் கல்வியாளர் சோனம் வாங்சுக்.
அவரின் உண்ணாவிரதத்தை 20வது நாளில் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆதரவாகவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் இருந்து பலர் குரல் கொடுத்தனர்.
கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்களை காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையினர் கொடூரமான முறையில் லத்திகளால் தாக்கினர்.
கண்ணீர் புகைகுண்டுகளை பிரயோகித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள், ஆணிகள் பொருத்திய லத்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சீருடையற்ற நபர்களும் கையில் லத்திகளுடன் மாணவர்களை தாக்கிய வீடியோக்களும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது. நாடு முழுதும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அழுத்தம் அதிகரித்த நிலையில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வினாத்தாள் கசிவை தடுக்க சிறப்பு மசோதா இயற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்தார்.
இதனைதொடர்ந்து மருத்துவமனையில் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததை அடுத்து அவர் தனது 26 நாட்கள் போராட்டத்தை நேற்றிரவு முடித்துக்கொண்டார்.
ஜூலை 20 அன்று பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என மத்திய அரசு தனக்கு உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தர்மேந்திர பிராதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இன்று ஜேபி நட்டாவை சந்தித்த சிஜேபி பிரதிநிதிகள் அதேயே வலுயுறுத்தினர்.
மறுபுறம் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க, மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றிலும் இணைய சேவை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடங்களின் மூலம் போராட்டத்திற்கு விடுக்கப்படும் அழைப்புகள் மூலம் அங்கு மேலும் பலர் வருவதை தடுக்கும் நோக்கத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.
ஆனால் இளைஞர்கள் இந்த இணைய சேவை முடக்கத்தை சாமர்த்தியமாக பைபாஸ் செய்து இணையம் தேவைப்படாத செயலிகள் மூலமும் பிற வகையிலும் வெளியுலக தொடர்பை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கிட்ஹப் நிறுவனத்தின் பிட்சாட் செயலி இணைய தேவை இன்று முற்றிலும் புளூடூத் மூலம் இயங்கக்கூடுய ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் ஆகும்.
இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட சூழலிலும், புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள மொபைல் போன்களுக்கு இடையே நேரடியாக செய்திகளை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது.
இந்த லூப் ஹோலை பலரும் பயன்படுத்தத்தொடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விழித்துக்கொண்ட மத்திய அரசு அச்செயலிக்கு தடை விதித்துள்ளது.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டவிரோதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கவும் இச்செயலி பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த செயலியை வரையறுத்துள்ள மத்திய அரசு பிட் சாட்டை முடக்கக்கோரி கிட் ஹப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்டதே இந்த 'பிட்சாட்' செயலியாகும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்'நேற்று இது தொடர்பான நோட்டீஸை அனுப்பியுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐ.டி விதிகள் 2021ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிட்சாட்டின் பிரதான Repository மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளை 3 மணி நேரத்திற்குள் தடையுறுத்துமாறு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசின் ஸ்க்ரீன் ஷாட்களை ஜாக் டோர்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் இணையம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிட்சாட் செயலியைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும், போராட்டக்காரர்கள் இச்செயலியைத் தான் பயன்படுத்தினார்களா என்பதை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.