இந்தியா

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை கொலையில் திடுக் திருப்பம் - மேற்கு வங்க தம்பதி கைது

அவரது அடுக்குமாடி குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியை கொலை வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட தேபோஸ்தா பால் (49) என்பவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஜூன் 4 அன்று கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கொலையை தொடர்ந்து, டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மேற்கு வங்கம் சென்ற டெல்லி போலீஸ் குழுவினர் குற்றவாளிகளான ராம்பிரசாத் தாஸ் (42), அவரது மனைவி பனஸ்ரீ தாஸ் (36) மற்றும் அவர்களது மைனர் மகனை இன்று கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில்,

பேராசிரியைக்கு சொந்தமான பர்த்வானில் உள்ள பூர்வீக வீட்டில், இந்தத் தம்பதியினர் கடந்த 2023 முதல் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

அந்த வீட்டைத் தங்களுக்கு விற்றுவிடுமாறு அவர்கள் பேராசிரியையிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து, வீட்டை உடனடியாகக் காலி செய்யுமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர், பேராசிரியையைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டினர். இதற்காக ஜூன் 3 அன்று அவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

தங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு நபர்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி டல்லுபுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.

சம்பவதன்று பேராசிரியையின் வீட்டிற்குச் சென்ற தம்பதியினர், அவரை பிளேடால் அறுத்து கொலையை செய்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுத் தப்பியுள்ளனர்.