இந்தியா

அபிஜீத் தீப்கே வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார் - இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்வாரா?

டெல்லி சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

டெல்லியில் ‘லெஹ்ரா தோ திரங்கா’ பேரணிக்கு காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜண்டேவாலனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் 12 நிபந்தனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை வழங்கினர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் போராட்டத்தில் தேசிய கொடியுடன் போராட்டக்காரர்கள் கலந்துகொள்ள வருமாறு சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

5 மணிக்கு போராட்டம்

இதையடுத்து டெல்லி ஜண்டேவாலனில் உள்ள அபிஜீத் தீப்கே வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்ற அறிக்கை ஒன்றை வழங்கினர்.

டெல்லி காவல்துறையினர் 29-வது சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் ஒன்றை அபிஜீத் தீப்கேவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது

மேலும் அந்த அறிவிப்பில், கன்னோட் பிளேஸ் பகுதிக்கு அருகில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையோ அல்லது பொதுக் கூட்டத்தையோ நடத்துவதற்கு தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அபிஜீத் தீப்கே காவலில் வைக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து டெல்லி காவல்துறையிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.

சிஜேபி நிர்வாகிகள் கைது

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த புதன்கிழமை, சிஜேபி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே சென்று மூவர்ண கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பகுதிக்கு உள்ளே சென்றதாக கூறி, செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகிய இருவரையும் டெல்லி காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் ஐந்து நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபிஜீத் தீப்கே கண்டனம்

இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே, பதிவு எண் இல்லாத வாகனங்கள் தன்னை பின்தொடர்வதாகவும், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தனது இல்லத்தை கண்காணித்து வருவதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர், டெல்லி காவல்துறை தன்னை கைது செய்யலாம், ஆனால் நாங்கள் பயப்பட போவதில்லை என்பதை பிரதமர் நரேந்திர மோடிக்கு கூற விரும்புவதாக கூறினார்.

SCROLL FOR NEXT