இந்தியா

டெல்லி காவல்துறை அதிகாரிகள் பாலியல் சீண்டல்... 3 பெண் பத்திரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு - அமித் ஷாவிடம் ராகுல் கேள்வி

500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது 3 பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுவதாகவும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆரில்) முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி அன்று ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்புகள் கூடி போராட்டம் நடத்தின.

இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் AISA தேசிய தலைவர் நேஹா போரா, சிவில் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அடங்குவர்.

தொடர்ந்து நேற்றும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200 போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்தது. நேற்றைய போராட்டத்தின்போது டெல்லி காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

குற்றச்சாட்டு

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் தங்களை தவறான முறையில் தொட்டதாகவும், அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் பெண் பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் விடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினர்.

காவல்துறையின் செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பின.

இதையடுத்து, அந்த 3 பத்திரிகையாளர்களும் காவல்துறையில் முறையாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெல்லி காவல்துறை, "போராட்டத் தளத்தில் மூன்று பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது.

நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக இந்தப் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

ராகுல் கேள்வி

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "ஜந்தர் மந்தர் அருகே ஒரு காவல்துறை அதிகாரி தவறாக நடந்துகொண்டதாக பெண் பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜந்தர் மந்தரில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்துள்ளது.

பெண் போராட்டக்காரர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கேமராக்கள் பறிக்கப்பட்டுள்ளன, பத்திரிகையாளர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் காவல்துறை பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதற்கான காணொளி ஆதாரங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

பெண்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான காவல்துறையினர், அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாகத் தாக்கி வருகின்றன.

டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அமித் ஷா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இதற்கு நீங்கள் பதிலளித்தாக வேண்டும்" என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT