இந்தியா

டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!

சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான காரணம்..

'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி

'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அனுமதி மறுப்பு & கட்டுப்பாடுகள்:

இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த போராட்டத்திற்கு எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்..

உதவி போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, நாடாளுமன்ற வீதிக்கு உட்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தர் தவிர மற்ற பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடவோ, பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தெரிவித்தது.

போராட்டக்காரர்கள் லத்திகள், கம்புகள், பதாகைகள் அல்லது எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல கூடாது என்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கோஷங்களை எழுப்பவோ, உரையாற்றவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா' பிரிவு 223-ன் கீழ் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குவியும் மக்கள் - பலத்த பாதுகாப்பு:

மறுபுறம், நீட் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் மற்றும் அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.