டெல்லியில் இன்று காலையில் திடீரென்று புழுதிப்புயல் ஏற்பட்டது. டெல்லியின் பல பகுதிகளில் இன்று மழை பெய்த நிலையில் சில பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக காலையில் வெளியே சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதால் வாகனம் ஓட்டி செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ அளவிலேயே நீடித்தது. நேற்று இரவு 7 மணியளவில் காற்றின் தரக்குறியீடு 189 ஆக பதிவானது. இன்று காலை 9 மணியளவில் இது 167 ஆக காணப்பட்டது. குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு மாறும் கால கட்டத்தில், மழை, பலத்த காற்று மற்றும் புழுதிப் புயல்கள் உள்ளிட்ட திடீர் வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
டெல்லியை சூழ்ந்துள்ள புழுதியானது உள்ளூரில் மட்டும் உருவானது அல்ல. மாறாக, வறண்ட பகுதிகளில் இருந்து வீசும் பலத்த காற்றினால் அது நீண்ட தூரங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனம், பலுசிஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தானின் சில பகுதிகள் போன்ற பாலை வன பகுதிகளில் இருந்து இந்த புழுதிகள் டெல்லிக்கு வருகின்றன. காற்று காரணமாக நுண்ணிய மணல் மற்றும் தூசுக்கள் வளி மண்டலத்தின் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இதனாலேயே டெல்லியில் புழுதிப்புயல் ஏற்படுகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் டெல்லியில் இன்று இரவு மற்றும் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.