விக்ரம் சிங் 
இந்தியா

VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை - 8 பேர் கைது

BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரை சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

தென்கிழக்கு டெல்லியின் கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார்.

தாக்குதல்

அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.

அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.

அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3வது தளம் வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.

உயிரிழப்பு

காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.

போராட்டம்

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.

மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இசைக்கலைஞர் விக்ரம் சிங்கின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீவிர விசாரணை நடத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

யார் இந்த விக்ரம் சிங்?

மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங், மணிப்பூரின் பல முன்னணி இசைக்குழுக்களில் முதன்மை கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்குத் தனியாக இசைப்பள்ளி ஒன்றை நிறுவி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்.

பல இசைக்கச்சேரிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

விக்ரம் சிங் பாரம்பரியமான கலைக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாயார் 86 வயதான சொங்தாம் ஓங்பி கமலா தேவி மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.

விக்ரம் சிங், இந்தியாவின் முதல் BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

விக்ரம் சிங்கிற்கு ஜோத்சனா (54) என்ற மனைவியும், யைபாபா (20) என்ற மகனும் உள்ளனர். மகன் யைபாபா சட்டம் பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT