மத்திய அமைச்சர் பங்களா 
இந்தியா

12 ஆண்டுகளில் ரூ.547 கோடி.. 2025-26இல் மட்டும் ரூ.92 கோடி - மத்திய அமைச்சர்களின் பங்களாக்கள் பராமரிப்பு செலவு!

12 நிதியாண்டுகளில் இந்த பங்களாக்களின் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.547.68 கோடி செலவிடப்பட்டுள்ளது.

டெல்லி லுட்யன்ஸ் பகுதியில் மத்திய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பங்களாக்கள் அமைந்துள்ளன. இவ்வாற்றை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

ஆடிஐ

தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆடிஐயின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பொதுப்பணித் துறை அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதற்கான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பராமரிப்பு, புதுப்பிப்பு, பழுதுபார்க்கும் பணிக்காக 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் இந்தச் செலவு ரூ.27.47 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஒப்பீடு

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த 2014-15 முதல் 2025-26 வரையிலான 12 நிதியாண்டுகளில் இந்த பங்களாக்களின் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.547.68 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2014 - 2019 நிதியாண்டில் ரூ.26.78 கோடி, 2019 - 2024 நிதியாண்டில் ரூ.50 கோடி, 2024 - 2025 நிதியாண்டில் ரூ. 71.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் உள்ளனர்.

இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 2025-26 இல் ஒரு அமைச்சரின் பங்களாவிற்குச் சராசரியாக ரூ.1.2 கோடி செலவிடப்பட்டுள்ளது என கணக்கிடலாம்.

2004 முதல் 2009 வரையிலான 5 ஆண்டுகள் முழுவதும் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ.93.50 கோடி செலவிடப்பட்டது.

ஆனால், தற்போது ஒரே ஆண்டில் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு மட்டும் அந்த அளவிற்கு செலவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

செலவு அதிகரிக்கக் காரணம் என்ன?

லுட்யன்ஸ் பகுதியில் உள்ள இந்த கட்டிடங்கள் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தை சேர்ந்ததாகும்.

1912 முதல் 1930 காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாக்கள் தற்போது 80 முதல் 100 ஆண்டுகள் பழமை நிலைமையை எட்டியுள்ளன.

நீர் கசிவு, கரையான் அரிப்பு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. பழமையான மின்சார அமைப்புகள் மற்றும் குழாய் அமைப்புகளை பராமக்க வேண்டிய தேவை அடிக்கடி எழுகிறது.

சில கட்டிடங்கள் பலவீனமடைந்துள்ளதால் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மின்விசிறிகள், எல்.இ.டி விளக்குகள், குழாய் அமைப்புகளை மாற்றுவது மற்றும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தரையில் பாதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் மாற்றுவது போன்றவற்றிற்கும் தொடர் செலவுகள் ஏற்படுகின்றன.

தற்போது வழங்கப்பட்டுள்ள ஆர்டிஐ தரவுகளில் அமைச்சர்களாக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களா பராமரிப்புச் செலவுகள் சேர்க்கப்படவில்லை.