இந்தியா

சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!

இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா வரும் 15 அன்று தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தேசிய தலைநகர் பகுதியில் வான்வழி மூலம் நிகழக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 16ஆம் தேதி வரை டிரோன்கள் மற்றும் சிறிய ரக வான்வழி சாதனங்களைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஆணையர் உத்தரவு:

டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார், புதிய குற்றவியல் சட்டமான 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' (BNSS), 2023 சட்டப் பிரிவு 163-ன் கீழ் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட சாதனங்கள்:

* ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள்

* ட்ரோன் அல்லாத வான்வழி வாகனங்கள்

* குவாட்காப்டர்கள்

* பாராகிளைடர்கள் மற்றும் பாரா-மோட்டார்கள்

* ஹேங் கிளைடர்கள் மற்றும் மைக்ரோலைட் விமானங்கள்

* ஹாட்டேர் பலூன்கள்

* பாரசூட் குதித்தல்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்:

சமூக விரோதிகள் அல்லது தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற வான்வழி சாதனங்களைப் பயன்படுத்தி முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கியமான அரசு தலைமை அலுவலகங்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீறினால் கடுமையான நடவடிக்கை:

இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் டிரோன்கள் அல்லது பிற சாதனங்களைப் பறக்கவிட்டால், அவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவு 223-ன் கீழ்' கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.