கடந்த 2004ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ஓர் இந்து இளம்பெண்ணும், மேற்கு வங்கத்தை சேர்ந்த இஸ்லாமிய வாலிபரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
1954-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி வாலிபரின் மாநிலமான மேற்குவங்கத்தில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.
ஆனால், அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளை மைனர் என்றும் அந்த வாலிபர் தனது பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, 2008ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அந்த வாலிபருக்கு கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் கீழ் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து 2009ஆம் ஆண்டு வாலிபர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம் வாலிபரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பின்போது பேசிய நீதிபதிகள், "வழக்கின் ஆவணங்களின்படி, அந்தப் பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே அந்த வாலிபருடன் சென்றுள்ளார் என்பது தெளிவாகிறது. இருவருடைய திருமணச் சான்றிதழும் ஆவணங்களில் முறையாகப் பதிவாகியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, தான் கடத்தப்பட்டதாகப் பிறரிடம் தெரிவிக்க அந்தப் பெண்ணிற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவர் மௌனமாகவே இருந்துள்ளார். அவரின் இந்த மௌனமே அவர் சுயவிருப்பத்துடன் தான் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
கீழமை நீதிமன்றத்தில் அந்தப் பெண், வாலிபருக்கு எதிராக அளித்த சாட்சியங்கள் அனைத்தும், சமூகம் அல்லது பெற்றோரின் கடுமையான கட்டாயத்தினாலும் அழுத்தத்தினாலும் அளிக்கப்பட்டவை என்றே தோன்றுகிறது.
அந்தப் பெண் திருமணத்தின் போது 18 வயதிற்குட்பட்ட மைனர் என்ற புகார்தாரரின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது:
மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி, அந்தப் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை அந்தப் பெண்ணிற்கு 18 வயதிற்குள் இருந்திருந்தாலும் கூட, 2004ஆம் ஆண்டில் நடைமுறையிலிருந்த சட்டத்தின்படி, மனைவியின் வயது 15க்கு மேல் இருக்கும் பட்சத்தில் கணவர் மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை.
சமூக அடுக்குகளும் அதில் பிளவுகளும் நிறைந்த இந்தச் சமூகத்தில், இளம் காதலர்களுக்குத் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த எல்லைகளை மீறத்துணியும் இளைஞர்கள் தங்களது உயிரையே பணையம் வைக்க வேண்டிய அவலநிலை இன்றும் தொடர்கிறது" என்று தெரிவித்தனர்.
17 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த வாலிபர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டு, அவர் நிரபராதி என டெல்லி உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.