டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் சீலிங் காற்றாடி கழன்று விழுந்ததில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நோயாளி 42 வயதான முகமது அக்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடும் நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் நேற்று தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், அவசர சிகிச்சை வார்டில் இருந்த அக்பருக்கு அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களுக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்த சீலிங் காற்றாடி திடீரென அடியோடு கழன்று அக்பர் மற்றும் அந்த செவிலியர் இருவர் மீதும் விழுந்துள்ளது.
இந்த விபத்து நடந்த அடுத்த 3 மணி நேரத்திற்குள் நள்ளிரவில் அக்பர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய இறப்புச் சான்றிதழில், அக்பர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிமோனியா மற்றும் ரத்த அழுத்த நோய்களால்தான் உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், காற்றாடி விழுந்த அதிர்ச்சியும் காயமும் தான் அவர் மரணத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லியின் டிரான்ஸ் யமுனா பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்நாடியாக இந்த ஜிடிபி மருத்துவமனை விளங்கி வருகிறது.
1991ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு தற்போது மிகவும் மோசமடைந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
கடந்த மாதம் தான், இந்த மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் அமைந்துள்ள பகுதியில் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.