டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த சிறுமி ஒருவர், அவரது முதலாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி 20 மணி நேரம் கட்டாய வேலை வாங்கப்பட்ட அந்தச் சிறுமி, கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். உடலில் சூடான இரும்பால் சுடப்பட்டும், பல்வேறு வகைகளில் சித்ரவதைச் செய்யப்பட்டும் வந்த அந்தச் சிறுமியின் நிலைக் கண்டறியப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் உரிமைகள் மற்றும் நல அமைப்புகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, காவல்துறையினர் உடனடியாகத் தீவிர சோதனை நடத்திச் சிறுமியை மீட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் தலைநகர் டெல்லியில் குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வன்முறைகள் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், கொடூரச் செயலில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை அதிகாரிகள், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும், சிறுமியை இந்த வேலைக்கு அமர்த்தியவர்கள் மற்றும் சட்டவிரோதமாக சிறுமியை பணியில் ஈடுபடுத்திய பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தைகளுக்கெதிரான இதுபோன்ற வன்கொடுமைகளை கடுமையாக கையாள சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.