இந்தியா

பெட்ரோல், CNG வாகன பதிவு நிறுத்தம்.. மின்சார வாகனங்களுக்கு மானியம் - டெல்லியில் புதிய மின்சார வாகன கொள்கை நாளை அமல்

வாகன மானியங்களுக்காக ரூ.7,000 கோடியும், சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.8,000 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது.

டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கி அம்மாநில அரசு, புதிய மின்சார வாகனக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூலை 1 (நாளை) முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கொள்கை, 2030 மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ரூ.30 லட்சம் வரையிலான மின்சார கார்களுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட உள்ளது.

புதிய கொள்கையின் கீழ்,

மானியம்

மின்சார இருசக்கர வாகனங்கள் (EV 2) வாங்குபவர்களுக்கு முறையே ரூ.30,000, ரூ.20,000 மற்றும் ரூ.10,000 என மூன்று ஆண்டுகளில் மானியம் வழங்கப்படும்.

மின்சார முச்சக்கர வாகனங்கள் (EV 3) வாங்குபவர்களுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000 மற்றும் ரூ.30,000 என மானியம் வழங்கப்படும்.

மின்சார லாரிகள் (EV Trucks) வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கொள்முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Zero Emission கொண்ட 100% தூய்மையான மின்சார வாகனங்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும்.

Hybrid வாகனங்களுக்கு இந்த கொள்கையின் கீழ் எந்தவித மானியமும் வழங்கப்பட மாட்டாது.

பெட்ரோல், சிஎன்ஜி வாகனங்களுக்கு தடை

டெல்லியை முழுமையான மின்சார வாகன நகரமாக மாற்றும் நோக்கில்,

ஜனவரி 1, 2027 முதல் டெல்லியில் புதிய மின்சார ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 1, 2028 முதல் புதிய பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இருசக்கர வாகனங்களின் பதிவு படிப்படியாக முழுமையாக நிறுத்தப்படும்.

முதலீடு

இந்த கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அடுத்த நான்கு ஆண்டுகளில் டெல்லி அரசு சுமார் ரூ.15,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.

இந்த மொத்தத் தொகையில், வாகன மானியங்களுக்காக ரூ.7,000 கோடியும், சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.8,000 கோடியும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட உள்ளது.

மையங்கள்

டெல்லி முழுவதும் மின்சார வாகனங்களுக்காக 32,000 புதிய சார்ஜிங் மையங்களை நிறுவ அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மானியங்கள் மற்றும் சலுகைகளுக்கு வாகன உரிமையாளர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் பிரத்யேக ஆன்லைன் இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.

டெல்லி அரசின் இந்த புதிய கொள்கை, டெல்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைமுறைக்கு வரவுள்ளது.