டெல்லியில் முன்மொழியப்பட்ட ட்ரோன் கொள்கையின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்தார்.
தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கொள்கையானது, ட்ரோன் ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், பிரத்யேக விமானப் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் சூழலமைப்பை மேம்படுத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், “வேலைவாய்ப்புகளுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்பட்டு வருகிறது. கொள்கை தயாராக உள்ளது;
ஒரு மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் வரைப்படமிடலுக்காக அரசு நிறுவனங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வழிவகை செய்தல், மற்றும் DGCA-வின் டிஜிட்டல் ஸ்கை தளத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், தேவையான துணை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின் கீழ் பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம், மக்களைச் சென்றடைதல், மண்டல அடையாளப் பலகைகள், விழிப்புணர்வு பட்டறைகள், பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்படும்.
டெல்லி ட்ரோன் கொள்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.
மேலும், நகருக்குள் காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அரசாங்கப் பணிகளுக்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டெல்லியில், பல முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பகுதி ட்ரோன் இல்லாக மண்டலமாக உள்ளன.
எனவே அந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் ட்ரோன் விழிப்புணர்வுப் பட்டறைகள், சிறப்பு மையங்களை உருவாக்குதல், தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் விமானி பயிற்சித் திட்டங்கள் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.