டெல்லியில் கடந்த திங்கள்கிழமை, 20 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண் டெல்லியின் பிதாம்புரா பகுதியை சேர்ந்தவர்.
சகோதரருக்கு வீடு மாற்ற உதவிவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்ப அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பெண் காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு தனியார் பேருந்தில் இருந்த நபரிடம் நேரம் கேட்டுள்ளார். அந்த நபர் உள்ளே வந்து பேசுமாறு அழைத்ததை அடுத்து, அந்தப் பெண் பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்து நகரத் தொடங்கியதும், பெண்ணை பேருந்தின் பின்பகுதிக்குத் தள்ளி நடத்துனர் வன்கொடுமை செய்துள்ளார்.
பேருந்து நங்லோய் ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டபோது, பேருந்து ஓட்டுநரும் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்தார்.
தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் வீட்டில் காத்திருப்பதாகவும் கூறி தன்னை விட்டுவிடுமாறு அந்தப் பெண் அழுது கெஞ்சியுள்ளார்.
எந்த புகாரும் அளிக்கமாட்டேன் என உறுதியளித்த பின்னரே அப்பெண்ணை இருவரும் இறக்கிவிட்டுள்ளனர்.
பேருந்தில் இருந்து இறங்கியதும் அந்தப் பெண் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் உமேஷ் குமார் மற்றும் ராமேந்திர குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
முன்னதாக வீட்டில் தனது நோயுற்ற கணவரும், குழந்தைகளும் காத்திருப்பார்கள், அவர்களுக்கு யார் சமைத்து கொடுப்பார்கள் என கூறி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற மறுத்த தகவல் அனைவரையும் உலுக்கியது.
இந்நிலையில் விசாரணையில் அப்பெண் சம்பவத்தின்போது குற்றவாளிகளிடம் கெஞ்சியது தெரியவந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பலர் தலைநகரிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடப்பது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
காயங்கள் இருந்தபோதும் மருத்துவ சிகிச்சை பெற மறுத்த பெண் வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் டெல்லி காவல் துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.