2006 அக்டோபர் 18 அன்று இன்கிரெடிபிள் இந்தியா பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட் திட்டத்தை நாடு முழுவதும் மத்திய சுற்றுலா அமைச்சகம் தொடங்கியது.
இந்த திட்டம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்பு வளாகங்களில் உள்ள காலி அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் வாடகைக்கு விடுவதற்கு அனுமதி அளிக்கிறது.
மேலும் அடிப்படை அறை கட்டணத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் காலை உணவு இரண்டும் அடங்கியிருக்க வேண்டும் என்றும் இந்த திட்டம் அறிவுறுத்துகிறது.
இதையடுத்து 2010-இல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக சர்வதேச சுற்றுலா பயணிகளை நிர்வகிக்கும் வகையில் இந்த திட்டத்தை புதுடெல்லி நிறைவேற்றியது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, தேசிய தலைநகர் டெல்லியில் 2,200-க்கும் மேற்பட்ட அறைகள் ‘தங்குமிடம் மற்றும் காலை உணவு’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் உள்ள ஃப்ளோரிஷ் ஸ்டே விடுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 11 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு அதிகமாக அறைகள் கட்டப்பட்டுள்ளதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஷ்ரா, “ நாங்கள் தங்கும் விடுதி மற்றும் காலை உணவுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப் போகிறோம், மேலும் அதன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் சரிபார்க்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் ஆறு அறைகளுக்கு மேல் நடத்துவது கண்டறியப்பட்டால், அதன் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று கூறினார்.