டெல்லி துக்ளகாபாத் பகுதியில் 3 பேரின் உயிரைக் குடித்த கொடூர தீ விபத்து, தற்செயலாக நடந்தது அல்ல., அது ஒரு தனிப்பட்ட பழிவாங்கலுக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான தீவைப்புச் சம்பவம் என்பது டெல்லி போலீசாரின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக 17 வயது சிறுமி ஒருவரைப் போலீசார் பிடித்துள்ளதோடு, 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மர்ம தீ விபத்தும் மரணங்களும்..
நேற்று முன்தினம் அதிகாலை 2:24 மணியளவில், தென்கிழக்கு டெல்லியின் கோவிந்த்புரி காவல் எல்லைக்குட்பட்ட துக்ளகாபாத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீ வேகமாகப் பரவியதில் கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 8 பேர் படுகாயமடைந்து எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பங்கஜ், சுஷிலா தேவி, சோனியா குமாரி ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கை மாற்றிய சிசிடிவி காட்சி..
தொடக்கத்தில் இது ஒரு எதிர்பாராத விபத்து என்று நினைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அந்த பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது தான் தெரிய வந்தது அது ஒரு பழிவாங்கும் செயலென்று.
தீ விபத்து ஏற்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் ஒரு பெண் அந்த கட்டிடத்திற்குள் செல்வதும், பின்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதும் தெரியவந்தது. மேலும் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் வெளியான உண்மைகள்..
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவிந்த்புரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த கட்டிடத்தில் உள்ள 5 வது மாடியில் வசிக்கும் தீபக் என்பவருடன் ஏற்பட்ட பணத் தகராறு மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக, அவரது பைக்கை எரிக்க திட்டமிட்டதாக அந்த சிறுமி ஒப்புக்கொண்டார்.
அந்த சிறுமிக்கு சரிதா (27) என்ற பெண் பெட்ரோல் மற்றும் தீப்பெட்டியை கொடுத்து உதவியதாகவும் தெரியவந்தது.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் முக்கியக் குற்றவாளியான நிரஞ்சன் (33) மற்றும் அவரது தம்பி ராஜ்குமார் (27) ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் பழிவாங்கும் நோக்கில் சிறுமியைப் பயன்படுத்தி இந்தச் செயலைச் செய்ய தூண்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபரீதமான விளைவு..
சிறுமியின் இலக்கு தீபக்கின் பைக் மட்டுமே என்றாலும், நள்ளிரவில் பைக்கில் வைக்கப்பட்ட தீ, எதிர்பாராதவிதமாக கட்டிடம் முழுவதும் பரவி, அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் கொடூர சம்பவமாக முடிந்தது.
உயிரிழந்தவர்களுக்கும் அந்தச் சிறுமிக்கும் எந்தப் பகையும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் இந்த வழக்கை பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சதித்திட்டம், கொலைக் குற்றமாகாத மரணம் விளைவித்தல், தீவைப்பு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் மாற்றிப் பதிவு செய்துள்ளனர்.
சிறுமி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில், சரிதா, நிரஞ்சன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.