டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியின் துக்ளகாபாத் மத்யம் மார்க்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை 2:35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தரைத்தளத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் முதலில் தீ ஏற்பட்டு கார்கள் எரிந்து அதன் நச்சுப்புகை மேல் மாடிகளில் பரவியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிய 6 பேரை ஜன்னலை உடைத்து பத்திரமாக மீட்டனர். படுகாயமடைந்திருந்த அவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலை 3:45 மணியளவில் நீண்ட போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலான பாதையில் இருந்ததால், சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் மீட்பு பணிகள் தாமதம் ஆகின.
முன்னதாக டெல்லியின் மால்வியா நகரில் உள்ள விடுதியில் கடந்த ஜூன் 3 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.