இந்தியா

ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஓட்டுக்கு வழங்கிய பணம்,சேலையை திருப்பி வாங்கிய வேட்பாளர்

தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் தான் வழங்கிய பரிசு பொருட்களை திருப்பி தர வேண்டும் இல்லை யென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பெற்றதை அடுத்து ஓட்டுக்கு வழங்கிய பணம்,சேலையை திருப்பி வாங்கிய வேட்பாளரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது.

கலவரத்தின் போது இரு தரப்பினரும் மாறி மாறி கார்கள், பைக்குகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடப்பா மாவட்டம், சேஷமாம்பாபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராமாதேவியும், பாப்பராஜ் பள்ளி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இந்திரம்மா என்பவரும் போட்டியிட்டனர். ராமா தேவி தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்

5-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்ட இந்திரம்மாள்ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தலுக்கு முன்பு இந்திரம்மா வாக்காளர்களுக்கு பட்டு சேலை, பணம், மது பாட்டில்கள் ஆகியவற்றை கொடுத்திருந்தார்.

தேர்தலில் தோல்வி அடைந்ததால் வாக்காளர்களை கண்டபடி திட்டி தீர்த்தார். பின்னர் தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் தான் வழங்கிய பரிசு பொருட்களை திருப்பி தர வேண்டும் இல்லை யென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

நேற்று இந்திரம்மா கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் தனது ஆதரவாளர்களுடன் இருந்தார்

பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளரின் செயல்

அப்போது கிராம மக்கள் இந்திரம்மா கொடுத்த பட்டு சேலை பணம் ஆகியவற்றை திருப்பிக் கொடுத்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ கடப்பா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT