கடந்த மண்டல காலத்துடன் ஒப்பிடுகையில் அரவணை விற்பனை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது என வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் அவர்கள் தரிசன அனுமதி பெற்று வருகின்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பான தரிசனத்திற்காகவும் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் சபரிமலை வரும் பக்தர்கள், கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அரவணை விற்பனை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மண்டல காலத்துடன் ஒப்பிடுகையில் அரவணை விற்பனை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது என வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் சுமார் 17 லட்சம் அரவணைகள் விற்பனையான நிலையில், இந்த முறை விற்பனை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 20 அன்று 4½ லட்சம் அரவணைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே நாளில் விற்பனை 2.8 லட்சமாக மட்டுமே இருந்தது. கடந்த புனித யாத்திரை காலத்தில், இதே கால கட்டத்தில் சராசரி தினசரி விற்பனை 3.5 லட்சம் அரவணைகளாக இருந்தது. அரவணை விற்பனையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, தேவசம் வாரியம் இதுவரை ரூ.8 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவையற்ற கட்டுப்பாடுகள் மற்றும் உடனடி முன்பதிவுகள் கிடைக்காது என்ற அச்சம் காரணமாக, ஏராளமான வழக்கமான பக்தர்கள் வருவதில்லை என்றும், பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.