டெல்லி  
இந்தியா

டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு

விடுதியின் உரிமையாளரை கைது செய்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே 5 மாடிகளை கொண்ட தனியார் மாணவர் பிஜி தங்கும் விடுதி செயல்பட்டு வந்துள்ளது.

இதில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்தனர்.

விபத்து

இந்நிலையில் நேற்று மதியம் விடுதி கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த மாணவர்கள் மற்றும் பிறர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர்.

இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர், சிக்கியுள்ளவர்களைத் தேடி வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை இணைந்து இடிபாடுகளை அகற்றி தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இரவு நேர மீட்புப் பணியின் போது மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 10 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. விடுதியின் உரிமையாளரை கைது செய்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வழக்குப்பதிவு

இந்த விபத்து தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டிட உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ரேகா குப்தா நேற்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சென்று சந்தித்தார்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

4 மற்றும் அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் மீது டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT