உனது தந்தைக்கு அடுத்து நீ தான்' என ஜீஷான் சித்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஆடியோவில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜிஷான் அக்தர் என்பவரின் பெயரில் தற்போது ஒரு மிரட்டல் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் பாபா சித்திக்கின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஜீஷான் சித்திக்கை மிரட்டும் வகையில் இந்தி மொழியில் உள்ள அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"உன்னுடைய தந்தையை நான்தான் கொன்றேன். இப்போது உனக்கான மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. உன்னுடைய பாதுகாப்பை எவ்வளவு வேண்டுமானாலும் பலப்படுத்திக்கொள். கடந்த முறை நீ அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டாய், ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து தப்பவே முடியாது."
இவ்வாறு அந்த ஆடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆடியோ குறித்து ஜீஷான் சித்திக்கின் சகோதரி பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன?
அது நிஜமாகவே தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜிஷான் அக்தர் பேசியதுதானா? மற்றும் அது எந்த ஐ.பி முகவரியிலிருந்து இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.