காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக சிஜேபி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு மெஜிஸ்திரேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி, அவரை பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து காவல்துறையின் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி கட்சியின் நிர்வாகிகளான செளரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நீதிமன்ற காவலில் உள்ள சிஜேபி நிர்வாகிகளை விடுதலை செய்யுமாறு சிஜேபி தொடர்ந்த வழக்கு, சிறப்பு நிர்வாக மெஜிஸ்திரேட் (Special Executive Magistrate) முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் வழக்கை விசரித்து வரும் மெஜிஸ்திரேட், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறி டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சிஜேபி நிர்வாகிகள் ஜாமீன் வழக்கை விசாரித்து வரும் மெஜிஸ்திரேட்டின் குற்றச்சாட்டிற்கு சிஜேபி மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சிஜேபி நிர்வாகிகளின் ஜாமீனை தாமதப்படுத்தும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சிஜேபி சட்ட ஆலோசகர் ரத்னா சிங் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சிஜேபியின் சட்ட ஆலோசகர் ரத்னா சிங் கூறுகையில், “நாங்கள் காலையில் இருந்து இங்கே இருக்கிறோம். முழு விசாரணையும் மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று எங்களிடம் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்கும் மெஜிஸ்திரேட் பிற்பகல் 1.30 மணியளவில் காவல் நிலையத்தில் தான் இருந்தார், ஆனால் அவர் மாலை 5 மணி வரை நீதிமன்ற அறைக்குள் நுழையவில்லை.
அவர் இறுதியாக வந்தபோது, சௌரவ் மற்றும் அஷுதோஷை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டுமா என்பது குறித்த எங்கள் வழக்கை அதன் தகுதியின் அடிப்படையில் கேட்க மறுத்துவிட்டார். மாறாக, அவர் தன்னிச்சையான கருத்துக்களை தெரிவித்தார்.
விசாரணை தொடங்கிய சுமார் ஐந்து நிமிடங்களுக்குள், தனக்கு ஒரு மிரட்டல் செய்தி வந்ததாக மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த தருணத்திலிருந்து, முழு விவாதமும் அந்த செய்தியைச் சுற்றியே சுழன்றது. சிஜேபி நிர்வாகிகளின் விடுதலைக்கான விசாரணை வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டுள்ளது.
இந்த முழு சம்பவமும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பது தெளிவாகிறது.
சௌரவ் மற்றும் அஷுதோஷின் விடுதலைக்கு தேவையான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்பதை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, இந்த மிரட்டல் செய்தியில் மட்டுமே கவனம் செலுத்த அவர்கள் முன்பே முடிவு செய்திருந்தனர்," என்று அவர் கூறினார்.