விராஜ்  
இந்தியா

உறவுக்கு தடையாக இருந்த காதலியின் 18 மாத குழந்தையை தரையில் அடித்து கொன்றவனுக்கு மரண தண்டனை

40 நாட்களுக்குள் வழக்கை விசாரித்து நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள இடையூறாக இருந்த அவளது 18 மாதக் குழந்தையை தரையில் தூக்கியெறிந்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வெறும் 40 நாட்களுக்குள் வழக்கை விசாரித்து நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

விராஜ் என்ற அந்த வாலிபரை குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொலையின் பின்னணி:

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் ஷிகோஹாபாத்தில் உள்ள யாதவ் காலனியில் கடந்த மே 30 அன்று இந்த கொலை நிகழ்ந்தது.

18 மாதமே ஆன ஆரவ் என்ற பச்சிளம் குழந்தையைக் குற்றவாளி விராஜ் பலமுறை சாலையில் தூக்கியடித்து கொடூரமாகத் தாக்கினான்.

படுகாயமடைந்த குழந்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காதல்

போலீஸ் விசாரணையின் போது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவனுக்கும் அந்தக் குழந்தையின் தாய்க்கும் இடையே காதல் உறவு இருந்துள்ளது.

தங்களது காதலுக்கும் திருமணத்திற்கும் இந்தக் குழந்தை தடையாக இருப்பதாக அவன் கருதியுள்ளான்.

குழந்தையின் தாயும் விராஜைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், தனது மகனை அதற்குத் தடையாகக் கருதியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை - தீர்ப்பு

குற்றவாளி விராஜ் குழந்தையைச் சாலையில் வீசித் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான விராஜைப் போலீசார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.

வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறை, சம்பவம் நடந்த வெறும் 6 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அரசுத் தரப்பில் 13 சாட்சிகளும், பிரதிவாதி தரப்பில் ஒரு சாட்சியும் விசாரிக்கப்பட்டனர்.

சாட்சியங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான தடய ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம் 40 நாட்களுக்குள் நீதிமன்ற விசாரணையை முடித்து தற்போது குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.