Sonam wangchuk, rahul gandhi 
இந்தியா

19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?

மத்திய அரசின் மெத்தனப் போக்கும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும் தான் முக்கியக் கேள்விகள்.

நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது.

இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சோனம் வாங்சுக் உடல்நிலை

இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது.

அவரது உடல் எடை 8.9 கிலோ குறைந்து தற்போது சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்ஸிஜன் அளவு 97% என்ற மோசமான நிலையில் உள்ளது.

உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தளர்ந்த குரல்

ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.

வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.

ராகுல் மௌனம்

மற்ற பிரச்சனைகளுக்கும் விமர்சனங்களுக்கும் மௌனம் காப்பது போல சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் குறித்தும் மத்திய பாஜக அரசு மௌனம் காத்து வருகிறது.

வழக்காக பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களில் மௌனம் காப்பதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.

இந்நேரம் அவர் ஜந்தர் மந்தருக்கு சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்திருக்க வேண்டும் என பலரும் அபிப்ராயப்பட்டு வருகின்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு வருகிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும் தான் முக்கியக் கேள்விகள்" என்றார்.

காங்கிரஸ்

ஜந்தர் மந்தர் சர்ச்சை ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி தனது தேசிய அளவிலான மாணவர்களின் குரல் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்திற்காக நாளை டேராடூன் செல்கிறார்.

ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளை குறித்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.