இந்தியா

மைசூரில் உலக புகழ் பெற்ற 416-வது தசரா திருவிழா இன்று தொடங்கியது

விழாவை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அம்பா விலாஸ் அரண்மனை, ஜம்பு சவாரி செல்லும் நகரின் பிரதான சாலைகள் மின் விளக்குகளால் ஒளிர்கின்றன.

தசரா தொடக்க விழாவில் முதல் முறையாக 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மத தலைவர்களும், கோவில் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கென தனி இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் உலகப் புகழ்பெற்ற 416-வது தசரா திருவிழா, கலாச்சார நகரமான மைசூரின் மணிமகுடமாக திகழும் சாமுண்டி மலையில் பிரம்மாண்டமாக சாமுண்டீஸ்வரி தேவி பூஜையுடன் இன்று முறைப்படி தொடங்கியது.

தசரா விழா

இன்று காலை சரியாக 11.50 மணி முதல் 12.13 மணிக்குள் தனுஷ் லக்கனத்தில் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது.

சாமுண்டி மலையில் உள்ள தெப்பகுளத்தில் புனித நீராடி பட்டுடுத்தி விசேஷ அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளித்தேரில் எழுந்தருளினார். இன்று சைலபுத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தசரா தொடக்க விழாவில் முதல் முறையாக 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மத தலைவர்களும், கோவில் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கென தனி இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டனர்.

பிரம்மசாரிணி தேவி

நாளை (12 -ந் தேதி) பிரம்மசாரிணி தேவிக்கும், 13 -ந் தேதி சந்திரகாந்தா தேவிக்கும், 14 -ந் தேதி கூஷ்மாண்டா தேவிக்கும், 15 -ந் தேதி ஸ்கந்தமாதா தேவிக்கும், 16 -ந் தேதி காத்யாயனி தேவிக்கும், 17 -ந் தேதி காலராத்திரி தேவிக்கும், 18 -ந் தேதி மகாகௌரி தேவிக்கும் மற்றும் 19 -ந் தேதி சித்திதாத்திரி தேவிக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நவராத்திரி கொலு மற்றும் மன்னர் யதுவீர் எம்.பி.யின் தனியார் தர்பார் தொடக்க விழாவும் நடைபெற்றது.

குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி

தசரா பண்டிகையின் முக்கிய அம்சங்களான குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் உணவுத் திருவிழா, தேவராஜ் அர்ஸ் பல்நோக்கு மைதானத்தில் தசரா மல்யுத்தம், காவா கல்லூரியில் நுண்கலை மற்றும் கைவினை முகாம், சாரணர் மற்றும் வழிகாட்டி மைதானத்தில் புத்தகக் கண்காட்சி, சாமுண்டி விகாரை மைதானத்தில் தசரா முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, புதிய சயாஜிராவ் சாலையில் உள்ள பசுமை மைதானத்தில் தசரா மின்விளக்கு ஏற்றுதல், கர்நாடக கண்காட்சி ஆணைய வளாகத்தில் ஒரு கண்காட்சி, மற்றும் அரண்மனை வளாகத்தின் மேடையில் தசரா கலாச்சார நிகழ்ச்சி மற்றும் மாநில சங்கீத வித்வான் விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விழாவை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அம்பா விலாஸ் அரண்மனை, ஜம்பு சவாரி செல்லும் நகரின் பிரதான சாலைகள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றன.

750 கிலோ தங்கம்

தசரா விழா ஆண்டுதோறும் நவராத்திரி முதல் நாளன்று தொடங்கி 9 நாட்களும் வெகு விமரிசையாக நடைபெறும். 10-ம் நாளில் ஜம்புசவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் நடக்கும். அப்போது யானைகள் புடைசூழ ஒரு யானை, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு கம்பீர நடைபோட்டு செல்லும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை காண லட்சக்கணக்கானோர் மைசூருவில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT