இந்தியா

இனி 10 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவிரி... இருக்கவே இருக்கு இன்ஸ்டாமார்ட்!

முதற்கட்டமாக பெங்களூருவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களை 10 நிமிடங்களில் வீட்டில் டெலிவிரி செய்யும் ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், இனி சிலிண்டரும் தங்கள் செயலியில் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்விக்கி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக பெங்களூவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

10, 5 கிலோ சிலிண்டர்கள் விநியோகம்

10 கிலோ ஹெச்பி நவ்யா சிலிண்டரும், சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரும் இதில் கிடைக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வாங்க ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வழக்கமான முறையைப் போலவே முதல்முறை வாங்கும்போது காலி சிலிண்டர் தரவேண்டாம், அடுத்தடுத்த முறை காலி சிலிண்டர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலமே இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.