ஆபாச செயலிகள் என்ற பெயரில் இயங்கும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.
'நைட் பிளே', 'ரிலூப்', 'கிஸ்', 'விமோ', 'ரிவோ', 'நெக்ஸோ' மற்றும் 'விக்சா' போன்ற பெயர்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மூலம் இந்த செயலிகள் முக்கியமாக பரப்பப்படுகின்றன.
இந்த விளம்பரங்கள் பயனர்களை ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட போலி இணைய தளங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இந்த இணையதளங்கள் பெரும்பாலும் "லைவ்" என்ற முகவரியைக் கொண்டிருக்கின்றன. பயனர்களை கவர்ந்து, கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றன.
செயலியை நிறுவியவுடன், ஆப் அப்டேட் என்ற பெயரில் இரண்டாவது தீங்கிழைக்கும் கோப்பு பதிவிறக்கம் செய்யப்படலாம். முதன்மை செயலிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி, 'அணுகல்தன்மை அனுமதி' போன்ற உணர்திறன் மிக்க அனுமதிகளை பெற பயனர்களை செயலி கேட்கிறது. இந்த அனுமதி வழங்கப்பட்டதும், தீம்பொருள் சாதனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தி, பின்னணியில் தொடர்ந்து இயங்கி, நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கிறது.
சில செயலிகள் விபிஎன்ஐ., நிறுவி, இணைய போக்குவரத்தை தாக்குபவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வர்கள் வழியே திருப்பி விட்டு, தகவல்களை திருடக்கூடும்.
மேலும் சாதாரண அமைப்புகள் மூலம் பயனர்கள் இந்தச் செயலிகளை நீக்க முடியாதவாறு தடுத்து, சாதனத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி வங்கி மற்றும் பிற நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்துகின்றன.
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது நம்பகமான ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்க வேண்டும். விளம்பரங்கள், சந்தேகத்திற்கிடமான இணைய தளங்கள் அல்லது இணைப்புகளில் இருந்து ஏபிகே., கோப்புகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தெரியாத செயலிகளுக்கு ஒருபோதும் அணுகல்தன்மை அனுமதியை வழங்கக் கூடாது.
ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை தவறாமல் சரி பார்த்து, அடையாளம் தெரியாதவற்றை நீக்க வேண்டும். கூகுள் பிளே ப்ரொடெக்டிவ் வசதியை எப்போதுமே இயக்கத்தில் வைத்து, ஆண்ட்ராய்டு சாதனத்தை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மேலும், வங்கி கணக்குகள் மற்றும் யுபிஐ., பரிவர்த்தனைகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட செயலியை நீக்க போனின் பவர் பொத்தானை அழுத்தி பிடித்து, பின்னர் 'பவர் ஆப் விருப்பத்தை அழுத்தி பிடிப்பதன் மூலம் போனை சேப் மோடில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். சேப் மோடு திரையில் தோன்றும் போது ஓகே அல்லது ரீஸ்டார்ட் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சேப் மோடுக்கு சென்றதும், செட்டிங்க்ஸ் ஆப்ஸ் பகுதிக்கு சென்று, சந்தேகத்திற்குரிய செயலியை தேர்ந்தெடுத்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். தெரியாத பிற செயலிகளையும் நீக்கி விட்டு, சாதாரண முறையில் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
ஒருவேளை செயலியை நீக்க முடியாவிட்டால், செட்டிங்க்ஸ்-அச்ச ஸ்பிலிடி. இன்ஸ்டால்டு சர்வீசஸ், டவுன்லோ டடுஆப்ஸ் பகுதிக்குச் சென்று, குறிப்பிட்ட செயலிக்கான அணுகல்தன்மை அனுமதியை முடக்க வேண்டும். பிறகு செட்டிங்க்ஸ், செக்யூரிட்டி பிரைவேசி, டிவைஸ் அட்மின் ஆப்ஸ் சென்று, அந்த செயலிக்கு நிர்வாக அனுமதி இருந்தால் அதைச் செயலிழக்க செய்ய வேண்டும். பின்னர் ஆப்ஸ் பகுதிக்கு சென்று செயலியை நீக்க வேண்டும். இதன் பிறகும் செயலியை நீக்க முடியாவிட்டாலோ அல்லது போன் ரீஸ்டார்ட் ஆன பிறகு செயலி மீண்டும் வந்தாலோ, முக்கியமான தரவுகளை பேக்கப் செய்துவிட்டு போனை பேக்டரி ரீசெட் செய்ய வேண்டும்.