நாட்டின் பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET UG 2026 தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் விரைவில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைமுறைகளைத் தொடங்கும்.
மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறீர்களோ, அந்தப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடப்பிரிவிற்குமான கட்-ஆஃப் மதிப்பெண்களை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் பின்னர் அறிவிக்கும். மேலும் பிரபலமான படிப்புகளுக்கான போட்டி இந்த ஆண்டும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகம், படிப்பு மற்றும் பிரிவைப் பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தின் கட்-ஆஃப் மதிப்பெண் என்பது விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, தேர்வின் கடினத்தன்மை, பாடப்பிரிவு விருப்பம், பிரிவு மற்றும் கல்லூரித் தேர்வுகள் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மிக அதிக CUET மதிப்பெண்கள் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 750 - 950க்கும் அதிகமான மதிப்பெண்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொருளாதாரவியல் (சிறப்புப் பட்டம்), அரசியல் அறிவியல் (சிறப்புப் பட்டம்), வணிகவியல் (சிறப்புப் பட்டம்), உளவியல் போன்ற பிரபலமான படிப்புகளுக்கு இறுதி மதிப்பெண்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
DU, JNU மற்றும் BHU போன்ற உயர்மட்ட மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 1000 முதல் 700 வரை மதிப்பெண்கள் தேவைப்படுகிறது. மேலும் இரண்டாம் நிலை கல்லூரிகளுக்குப் பொதுவாக 600க்கும் அதிகமான மதிப்பெண்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வ இறுதி கட்-ஆஃப் மதிப்பெண்ணை, மாணவர் சேர்க்கையின் போது அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் விரைவில் வெளியிடும்.