இந்தியா

இன்ஸ்டாகிராம் மோகம் செய்த கொடூரம்: 6 வயது மகளை மரக்கட்டையால் அடித்து மண்டையை உடைத்த கொடூர தாய் கைது!

இரண்டாவது கணவரும் இதற்கு முன் குழந்தையை தலையில் தாக்கியதில் 4 தையல்கள் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம் அருகேயுள்ள நெய்யாற்றின்கரை பகுதியில், செல்போனில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை விளையாட்டுத் தனமாக நீக்கிய 6 வயது பெண் குழந்தையை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கி மண்டையை உடைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அடுத்த பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா. தன் முதல் கணவரைப் பிரிந்த இவர், விஷ்ணு என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். கணவன் வேலைக்குச் சென்ற பிறகு வாட்ஸ்அப் சாட்டிங், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என முழுநேரமும் செல்போனுடன் மூழ்கி, சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் இவர் தனது 6 வயது பெண் குழந்தையைக் கூட சரிவர கவனிக்காமல் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தாயின் செல்போனை எடுத்து சிறுமி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போனில் இருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற செயலிகளை சிறுமி அன்-இன்ஸ்டால் செய்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த தாய் ஷோபா, தன் கைக்கு கிடைத்த மரக்கட்டையால் 6 வயது பச்சிளம் குழந்தையை சரமாரியாகத் தாக்கியதுடன் தரையில் தூக்கி வீசியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் சிறுமியின் தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதுடன், குழந்தை மயங்கிச் சரிந்துள்ளது. இதனைக் கண்ட தாய் ஷோபா, தனது மகள் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாகப் பக்கத்து வீட்டு உறவினர்களிடம் கத்தி நாடகமாடியுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள கொடுங்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், காயங்கள் கட்டிலில் இருந்து விழுந்தது போன்றல்லாமல், யாரோ தாக்கியது போல் உள்ளதாகக் கருதி நெய்யாற்றின்கரை துணை காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய பாறசாலை மகளிர் காவல்துறையினர், தாய் ஷோபாவை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியிடம் குழந்தைகள் நலத்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷோபாவின் இரண்டாவது கணவர் விஷ்ணுவும் இதற்கு முன் ஒருமுறை குழந்தையைத் தலையில் தாக்கியதில் 4 தையல்கள் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதால், அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT