இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) கடந்த 5 ஆண்டுகளில் 262 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.
இவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் நிலைகளில் உள்ள கீழ்நிலை வீரர்கள் ஆவர்.
இதில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 59 அதிகபட்சமாக வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் படி, 2021 முதல் 2025 வரை மொத்தம் 262 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் 202 வீரர்கள் (77%-க்கும் மேல்) பணியில் இருந்த போதே உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்கள் விடுமுறையில் சென்றிருந்த போது தற்கொலை செய்துள்ளனர்.
2021 இல் 57 வீரர்கள், 2022 இல் 43 வீரர்கள், 2023 இல் 57 வீரர்கள், 2024 இல் 46 வீரர்கள், 2025 இல் 59 வீரர்கள், 2026 ஜூலை வரையிலான 19 சம்பவங்களையும் சேர்த்துக் கொண்டால் 281 பேர் தற்கொலை மூலம் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 281 வீரர்களில் 237 பேர் (84%) , கான்ஸ்டபிள், ஹெட்கான்ஸ்டபிள் உள்ளிட்ட கீழ்நிலை வீரர்கள் 43 பேர் எஸ்ஐ, ஏஎஸ்ஐ உள்ளிட்ட உதவி அதிகாரிகள், ஒருவர் உயர் அதிகாரி
பெரும்பாலான தற்கொலை வழக்குகள் குடும்பப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்றும், கடுமையான பணிச்சுமை மற்றும் ஓய்வில்லாத கடினமான காவல் பணிகளும் இதற்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3.25 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப் படையில், எந்த நேரத்திலும் 95% முதல் 97% வரையிலான வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வீரர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதி செய்யப் பல சிறப்பு நடவடிக்கைகளை CRPF நிர்வாகம் தொடங்கித் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.