இந்தியா

துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு: பிரதமருக்கு நன்றி தெரிவித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார்.இறுதி மூச்சு உள்ளவரை தேசத்துக்காக உழைப்பேன் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

மாலை மலர்

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீதான நம்பிக்கைக்கும் தேசத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசத்துக்காக உழைப்பேன் என உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.