தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு, ஒரு முடிவுகட்டப்பட வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூலை 2015-ல், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடமிருந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெற்ற கடன்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவின் வங்கிப் பத்திரங்கள் மற்றும் மோசடி பிரிவு மல்லையா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
அவர் மீது குற்றச் சதி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது, மோசடி, பணமோசடி மற்றும் அந்தக் கடன்கள் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து மல்லையா மீது இந்தியாவில் பல சட்ட வழக்குகள் தொடரப்பட்டது.
இதையடுத்து விஜய் மல்லையா, 2016 மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி, அன்று முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை அவர் எதிர்த்து வருகிறார்.
தலைமறைவான மல்லையாவின் கடன்களை மீட்பதற்காக அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை, எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்பு பயன்படுத்தி கொள்ள, தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2018-ல் வெளிநாட்டு உரிமை மீறல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அச்சட்டத்தின் கீழ் மல்லையா மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இங்கிலாந்து நீதிமன்றங்கள் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அவர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான ஒரு விண்ணப்பத்தை பயன்படுத்தி தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மல்லையாவின் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, அமலாக்க இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள, பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான கடன் வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மல்லையா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் இன்று, மல்லையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் குறிப்பிட்ட சொத்துக்களுக்கு பாதுகாப்பு கோரப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், குறிப்பிடப்பட்ட பெரும்பாலான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதால், அந்த மனு இனி செல்லுபடியாகாது என்றும் தேசாய் வாதிட்டார்.
மேலும் அவர், “பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தை நிலுவையில் வைத்திருப்பது முறையானது கிடையாது. ஆரம்பத்தில் கோரப்பட்ட ரூ.6,203.35 கோடி நிலுவைத் தொகை மற்றும் வட்டிக்கு எதிராக, வங்கிகள் ஏற்கனவே மல்லையாவிடமிருந்து சுமார் ரூ.15,000 கோடியை வசூலித்துவிட்டது.
ரிசர்வ் வங்கியின் தணிக்கை அறிக்கை, இது ஒரு விமான நிறுவனத்தின் வணிகத் தோல்வி மட்டுமே என்று கூறுகிறது. வங்கிகள் ரூ. 15,000 கோடியை எடுத்துக்கொண்டன, இப்போது மன்னிப்பு கேட்கின்றன. இது போதாது,” என்று மல்லையாவின் வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த நிலையில் வழக்கு நீதிபதி ஜாதவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உண்மையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
சமரசப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தைத் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேவேளையில், இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல், தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.